செய்திகள்
லஞ்சம்

செய்யூர் அருகே ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

Published On 2019-11-26 15:44 GMT   |   Update On 2019-11-26 15:44 GMT
செய்யூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகம்:

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வீராணங்குன்னத்தை சேர்ந்தவர் காளி (வயது 38). இவர் செய்யூர் தாலுகாவுக்கு உள்பட்ட செங்காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது பூர்வீக நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அதிகாரி காளியை அணுகி மனு வழங்கினர்.

அதற்கு காளி ரூ.9 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. முதல் தவணையாக ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த கோபாலகிருஷ்ணன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரது தலைமையிலான போலீசார் கோபாலகிருஷ்ணனிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரி காளியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அந்த பணத்தை காளியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செய்யூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றினர்.

காளியை செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News