செய்திகள்
டாக்டர் சுதா சேஷய்யன்

கொரோனா முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை விட்டுவிடக்கூடாது- டாக்டர் சுதா சேஷய்யன் தகவல்

Published On 2021-01-13 01:46 GMT   |   Update On 2021-01-13 01:46 GMT
கொரோனா தடுப்பூசி வந்த பிறகும் தற்போது பின்பற்றப்படும் முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை விட்டுவிடக்கூடாது என்று டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும், திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடத்தியது.

கருத்தரங்கத்துக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாமரைச் செல்வி, வேலூர் மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வி, மருத்துவ பல்கலைக்கழகத்தின் நோய் பரவியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்பட பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று வந்தபோது, இது அடுத்த ஆண்டும் வருமா?, அப்படி அடுத்த ஆண்டு வந்தால் அதை பார்க்க நாம் இருப்போமா? என்ற சந்தேகம் உலகத்தில் பலருக்கு இருந்தது.

நோய்த்தொற்று என்பது ஏதோ பயங்கரமான விஷயம் என்று நினைக்காதீர்கள். இந்த நோய்த்தொற்று காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கிறோம் என்ற வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று நினையுங்கள். நீங்கள் உங்கள் சுயசரிதை எழுதும்போது, உங்கள் குழந்தைகள், மாணவர்கள், அடுத்த தலைமுறையினரிடம் பேசும்போது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா? என்று பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எல்லா தலைமுறையினருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

இந்த கொரோனா நோய்த்தொற்று இன்றே உலகத்தைவிட்டு ஓடிவிடுமா?. நிறைய தடுப்பூசிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. சில தடுப்பூசிகள் சமூகத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் கூட கொரோனா தடுப்பூசி நிகழ்வு நடந்துகொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி வந்தபிறகும், தற்போது பின்பற்றப்பட்டு வரும் முக கவசம், சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதாரம் போன்ற முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை விட்டுவிடக்கூடாது. அப்படி நினைக்கவும் கூடாது. புதிதாக வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இயற்கையோடு மனித இனம் அதிகமாக விளையாடுகிறது. இனி அப்படி இருக்காமல், நம்மால் அதற்கு என்ன பங்களிப்பு செய்ய முடியுமோ? அதை செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News