செய்திகள்
மீனவர்கள்

மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை வேண்டுகோள்

Published On 2021-11-08 03:01 GMT   |   Update On 2021-11-08 03:01 GMT
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுச்சேரி:

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவைக்கு ‘ஆரஞ்சு அலார்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீனவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் என்ஜினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தங்களது கிராமத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் மற்றும் படகு உரிமையாளர்களுக்கும் ஒலிபெருக்கி மூலமாகவும், தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வழக்கமாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும். முதல் முறையாக மீன் வளத்துறை சார்பில் மீனவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News