உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருப்பூரில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் நகை 'அபேஸ்'- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2021-12-07 08:33 GMT   |   Update On 2021-12-07 08:33 GMT
2 பேரும் கீதாவிடம் திருட்டு அபாயம் உள்ளதால் தங்க நகையை அணிந்து செல்ல வேண்டாம் என்று கூறி நகையை கழற்றி பர்சில் வைக்க அறிவுறுத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு, கருவம்பாளையம் திருநகரை சேர்ந்தவர் கீதா(வயது 52). இவர் காய்கறி வாங்க அப்பகுதி சாலையில்  நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர், கீதாவிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டதுடன், நகைகளை அணிந்து கொண்டு தன்னந்தனியாக எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

பின்னர் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த நபரிடம் கீதாவை அழைத்துசென்றுள்ளார். அங்கு 2 பேரும் கீதாவிடம் திருட்டு அபாயம் உள்ளதால் தங்க நகையை அணிந்து செல்ல வேண்டாம் என்று கூறி நகையை கழற்றி பர்சில் வைக்க அறிவுறுத்தினர்.இதனை நம்பிய கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி பர்சில் வைத்தார்.

அதனை 2 பேரும் வாங்கி பார்த்து விட்டு பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளனர்.அதன்பின் வீட்டுக்கு சென்ற கீதா, பர்சை பார்த்த போது அதில் நகை இல்லை. மர்மநபர்கள் 2 பேரும் அதனை அபேஸ் செய்துள்ளது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3லட்சம் இருக்கும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்த போது 2மர்மநபர்கள்  உருவம் பதிவாகி இருந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் 60 அடி சாலையில் அக்காள்-தங்கை இருவரிடம் போலீஸ் போல் நடித்து 16 பவுன் நகைகளை மர்மநபர்கள்  அபேஸ் செய்து சென்றனர். அவர்கள் இதுவரை போலீஸ் பிடியில் சிக்கவில்லை. தற்போது மற்றொரு பெண்ணிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகையை பறித்து சென்றுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News