ஆன்மிகம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-16 05:04 GMT   |   Update On 2021-04-16 05:04 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 5 மணி அளவில் ரிஷப ஹோமம் நடந்தது. அதன் பிறகு நந்தி மற்றும் கொடிமரத்துக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, காலை 6 மணி அளவில் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதைதொடர்ந்து இரவு 7 மணி அளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தில் சாமி, பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடந்தது.

இத்திருவிழாவில் வருகிற 24-ந் தேதி பட்டாச்சாரியார்கள் மூலம் திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. 25-ந் தேதி நடக்க இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 26-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News