ஆன்மிகம்
அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்ததையும், காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடி வந்ததையும் காணலாம்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

Published On 2021-10-16 02:02 GMT   |   Update On 2021-10-16 02:02 GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
குலசேகரன்பட்டினம் :

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழாவையொட்டி பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்த பக்தர்கள் காப்புக்கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து, அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுவினரும் பல்வேறு வேடங்களை அணிந்து கலைநிகழ்ச்சி நடத்தியதால், தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் கோவில் மண்டபத்தில் சூலாயுதத்துடன் எழுந்தருளிய அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.

பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.



தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அன்னை சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி, கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

11-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உள்பிரகாரத்தில் அம்மன் வலம் வந்து மீண்டும் கோவிலை சேர்கிறார். மாலையில் கோவிலில் கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

விழாவின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தசரா திருவிழாவையொட்டி, உடன்குடி தாண்டவன்காட்டில் பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட அம்மன் சிலைகள் கண் திறந்து மூடுவது போன்று ஒளி, ஒலி அமைப்புடன் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மலைமுகடுகளில் இருந்து பல்வேறு அம்மன்கள் வெளியே வந்து செல்வது போன்றும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். உள்ளூர் நபர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே அனுமதித்தனர். வெளியூர் நபர்களை அனுமதிக்கவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News