செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2019-09-22 13:37 GMT   |   Update On 2019-09-22 13:37 GMT
டெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும், அதை தாங்கிக் கொண்டு எப்படி நடந்து கொள்வது என்பது தான் முக்கியம். மருத்துவர்களைத் தேடி மக்கள் சென்ற நிலை மாறி, மக்களை தேடி மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.

தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதற்காக கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி, தற்போது மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். அதில் 37 லட்சம் குடும்பத்தினர் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் ஏறத்தாழ 100 பேர் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சிலர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் டெங்கு பாதிப்பு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று உள்ளது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித்தது.

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றோடு பிரசாரத்தில் ஈடுபட்டு, நடக்கவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News