செய்திகள்
ரஜினிகாந்த்

26-ந்தேதி 40-வது திருமணநாள்: ரஜினி முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு?

Published On 2021-02-23 07:06 GMT   |   Update On 2021-02-23 07:06 GMT
வருகிற 26-ந் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், கொரோனா பரவிவரும் நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதன் பின்னர் ரசிகர்கள் போராட்டம் நடத்திய போதும், அறிக்கை வெளியிட்டு ‘மனவேதனை’ அடைவதாக கூறி இருந்தார். எனது நிலையை தெளிவுபடுத்தி விட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலுக்கு மீண்டும் அழைத்து சங்கடப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல், ரஜினியிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். இதன் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.

வருகிற 26-ந் தேதி ரஜினிகாந்த்- லதா தம்பதியரின் 40-வது திருமண நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் திருமண நாள் அன்று ரஜினிகாந்த் குடும்பத்து பெரியவர்களை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். பிறந்தநாள் அன்று ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வீட்டு அருகே ரசிகர்கள் கூடுவதுபோல திருமண நாள் அன்றும் எப்படியாவது வாழ்த்து சொல்லிவிட வேண்டும் என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று தெரிவித்துவிட்டதை அடுத்து ரசிகர்கள் பலர் மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.

இருப்பினும் கடைசி நேரத்தில் மாறிவிடமாட்டாரா? என்று இன்னும் சில ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில் தான் வருகிற 26-ந் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘26-ந் தேதி அன்று மாவட்ட நிர்வாகிகள் யாரையும் ரஜினிகாந்த் சந்திக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். எங்களுக்கு இதுவரையில் எந்த அழைப்பும் இல்லை. அதே நேரத்தில் டுவிட்டர் வழியாக திருமண நாளில் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிடுவார் என்று காத்திருக்கிறோம்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

Similar News