செய்திகள்
பள்ளம் ஏற்பட்டு உள்ளதையும் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதையும் படத்தில் காணலாம்.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம்

Published On 2021-01-17 04:34 GMT   |   Update On 2021-01-17 04:34 GMT
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் வழியாக கழிவுநீர் வெளியேறுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் ஆங்காங்கே ஆள்நுழைவுத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன. மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவுத் தொட்டிகள் மட்டும் 15 இடங்களில் உடைந்து சேதமடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தரங்கம்பாடி சாலையில் ஆள்நுழைவுத் தொட்டி உடைந்து உள்வாங்கியதால் அங்கு தற்போது வரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

இதன் காரணமாக தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு குறுகலான தருமபுரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கால் டெக்ஸ் நான்கு ரோடு சந்திப்பில் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் உடைந்து சாலை உள்வாங்கி வட்டவடிவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சாலை உள்வாங்கிய பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, அந்த இடத்தில் யாரும் அருகில் செல்லாதவாறு தடுப்பு வைத்துள்ளனர். பாதாள சாக்கடை குழாய் உடைந்து இந்த பள்ளம் ஏற்பட்டதால் சீர்காழி சாலை, பூம்புகார் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லமுடியாமல் ஆள்நுழைவுத் தொட்டிகளிலிருந்து வெளியேறி வருகிறது.

எனவே பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை சரி செய்து, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News