செய்திகள்
பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2021-11-25 08:24 GMT   |   Update On 2021-11-25 14:00 GMT
ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் மக்கள் தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலம், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை மத்திய குடும்ப நல அமைச்சகம் எடுத்து வருகிறது.

சமீபத்தில் அருணாசல பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வில் ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகவும், உணவுகளை வீணாக்குவது 21 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைந்தது தெரிய வந்துள்ளது.

குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 36-ல் இருந்து 32 சதவீதமாக குறைந்துள்ளது. 14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு 180 நாட்களுக்கு மேலாக இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்ட போதும், இந்த பாதிப்பு குறையவில்லை. இந்திய அளவில் இது பாதியாகும்.

மருத்துவமனையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆபரே‌ஷன் மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் 12 முதல் 23 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 62 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஒடிசாவில் மட்டும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதம் பெற்றுள்ளனர்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசு ‘இந்திர தனுஷ் மி‌ஷன் திட்டம்’ தொடங்கப்பட்டது முக்கிய காரணம் ஆகும். மேற்கண்ட தகவல்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்...பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்

Tags:    

Similar News