உலகம்
கோப்பு படம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: உலக அளவில் புதிய உச்சம்

Published On 2022-01-11 06:47 GMT   |   Update On 2022-01-11 06:47 GMT
உலக அளவில் தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு இருக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
நியூயார்க்:

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஆண்டு மத்தியில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

ஆனால் அதன் பின் மெல்ல மெல்ல கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது.

ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு திடீரென்று லட்சக்கணக்காக அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள்.



இந்த நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு இருக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சில மாகாணங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை முழுமையாக வரவில்லை என்றும் அந்த அறிக்கைகள் வந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மற்றொரு தகவலில் நேற்று ஒரே நாளில் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3-ந் தேதி ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அமெரிக்காவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவது கவலை அடைய செய்துள்ளது.

கடந்த 3 வாரங்களில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News