ஆன்மிகம்
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் உறியடி திருவிழா நடந்தபோது எடுத்த படம்.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் உறியடி திருவிழா

Published On 2020-09-14 06:12 GMT   |   Update On 2020-09-14 06:12 GMT
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் உறியடி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையன்று உறியடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உறியடி திருவிழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நெல்லை தச்சநல்லூர் கண்ணன் சேவா சங்கத்தின் சார்பில் உறியடி உற்சவம் தொடங்கியது. கோவில் சன்னதியில் இருந்து பாடல்கள் பாடி வந்த பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க உறியடித்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

முன்னதாக திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் நம்பிசுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். தற்போது கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறியடி திருவிழா நடத்தப்பட்டது.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. வனத்துறை சோதனை சாவடியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, கைகளில் சானிடைசர் வழங்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கோவிலில் அர்ச்சனை செய்யவும், பிரசாதங்கள் வழங்கவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ உத்தரவின்படி, வனசரகர் பாலாஜி தலைமையில் வனத்துறை ஊழியர்களும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News