செய்திகள்
இல.கணேசன்

அதிமுகவுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார்- இல.கணேசன் பேட்டி

Published On 2021-01-23 01:59 GMT   |   Update On 2021-01-23 01:59 GMT
யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்வதாகும். எனவே அ.தி.மு.க.வுக்கு சசிகலா துரோகம் செய்யமாட்டார் என இல.கணேசன் கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நேற்று காலை பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ள சட்டங்களாகும். ஒரு கும்பல் தான் இந்த சட்டங்களை எதிர்க்கிறது. கமல்ஹாசனை கூட்டணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பது, நான் வீணாக போய்விட்டேன், நீயும் என்னோடு வா நன்றாக இருக்கும் என்பதை போலும், தண்ணீரில் மூழ்கிறவன் நம்மை பிடித்து இழுப்பது மாதிரியும் உள்ளது.

கே.எஸ். அழகிரிக்கு தி.மு.க.வில் இடம் கொடுப்பார்களா? என்ற சந்தேகம் வந்து இருக்கிறது. அதிரடியாக ஜெகத்ரட்சகனை புதுச்சேரி மாநில முதல்-மந்திரி வேட்பாளராக தி.மு.க. அறிவித்துள்ளது. ஒரு கட்சி திடீரென இப்படி அறிவித்த காரணத்தால், தமிழகத்தில் மட்டும் நாங்கள் கூட்டணி என்று எப்படி சொல்ல முடியும்.

அநேகமாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் உறவை முறிப்பதற்கான முன்னோட்டம் தான் இது. கூட்டணியை முறித்து கொண்டால் நாட்டுக்கு நல்லது. சசிகலா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கி, தண்டனை காலம் முழுமையாக முடிந்த பிறகு வெளியே வருகிறார். ஆனால் மற்ற கட்சி தலைவர்கள் அவர் வருவதை சிங்கம், புலி, கரடி கூண்டில் இருந்து தப்பித்து வெளியே வருவது மாதிரி ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர். ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர் சசிகலா. பின்னணியில் ஆயிரம் இருந்தாலும் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே இருந்த நட்பு, விசுவாசம் ஈடுசெய்ய முடியாத சிறப்பானது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அ.தி.மு.க. என்ற கட்சி ஜெயலலிதா நினைவாக உள்ள கட்சி. இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா நினைவாக உள்ள சின்னமாகும். அ.தி.மு.க. என்ற கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் தான்.

எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும். எனவே அவர் துரோகம் செய்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவர் எதுவும் செய்யமாட்டார். எனவே அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல. சசிகலா வெளியே வரட்டும். அதற்கு பிறகு பார்ப்போம். நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அதே பகுதியில் உள்ள வேதபாட சாலைக்கு சென்று அங்கு பாடங்கள் சொல்லி கொடுப்பதை பார்வையிட்ட இல.கணேசன், கொரோனா தொற்று காரணமாக 300 நாட்களுக்கு மேல் நடைபெறும் அன்னதானத்தையும் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஜெய்சதீ‌‌ஷ், மாவட்ட துணைச் செயலாளர் சுதந்திரதேவி, மண்டல தலைவர் சக்திவடிவேல், மாநகர பொதுச் செயலாளர் போஸ், கலை இலக்கியப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News