செய்திகள்
கொலை

சேலத்தில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை

Published On 2020-11-15 06:53 GMT   |   Update On 2020-11-15 06:53 GMT
மது குடித்ததை தட்டிகேட்ட அண்ணனை, தம்பி கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சம்பவம் மணியனூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொண்டலாம்பட்டி:

சேலம், மணியனூர் அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் யுவராஜ் (வயது 30).

இந்த நிலையில் பெற்றோர் இறந்ததை தொடர்ந்து யுவராஜ், தனது தாய் தனலட்சுமியின் தந்தை கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

அதே வீட்டில், தனலட்சுமியின் தங்கை விஜயா என்பவருடைய மகனும் (வயது 17) வசித்து வருகிறார். இவர், யுவராஜிக்கு தம்பி முறையாகும். அதாவது, யுவராஜியின் சித்தி மகன் ஆவார்.

கிருஷ்ணன், யுவராஜ், இந்த சிறுவன் ஆகிய 3 பேரும் ஒரு இரும்பு டின் தயார் செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் அந்த சிறுவன் மது குடித்து வந்தான். தனது தம்பி மதுவுக்கு அடிமையானதை கண்டு கவலை அடைந்த யுவராஜ், பல முறை அவனுக்கு அறிவுரை கூறினார். ஏன் தினமும் மது குடிக்கிறாய்? சம்பாதிக்கும் பணத்தை வீண் செய்கிறாயே? என கூறி சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் அவன் கேட்கவில்லை.

நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி அவன், அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தான். இதனால் யுவராஜ், அவனை திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பேரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளனர். இதில் கோபம் அடைந்த அந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே சென்றான். அந்த சமயத்தில் கிருஷ்ணன், அங்கு இல்லை. அவர் மகளை பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார்.

இந்த நிலையில் இரவு சுமார் 7.30 மணி அளவில் வீட்டின் வெளியே உள்ள சிமெண்ட் ரோட்டில் யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சண்டை போட்டு விட்டு வெளியே சென்றிருந்த அவரது தம்பி, திரும்பி வந்து பெரிய கல்லை எடுத்து யுவராஜியின் தலையில் போட்டு விட்டு ஓடிவிட்டார். இதில் யுவராஜ் மண்டை உடைந்து ரத்தம் மளமளவென கொட்டியது. சத்தம் கேட்டு அக்கம்-பக்கத்தினர் அங்கு வந்து யுவராஜை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 11.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அவரது தம்பியை தேடி வருகிறார்கள். அவரது தந்தை மணியரசு, ஈரோட்டில் வசித்து வருகிறார். எனவே அங்கு அவர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் அங்கும் விரைந்துள்ளனர்.

கொலையுண்ட யுவராஜிக்கு மாசானி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மாசானி தனது கணவரை விட்டு விலகி, காங்கேயம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News