ஆன்மிகம்

பொறுமையின் பொக்கிஷம்

Published On 2018-08-23 04:31 GMT   |   Update On 2018-08-23 04:31 GMT
எத்தகைய துன்பம் வந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொறுமையை கையாள வேண்டும் என்ற படிப்பினையை அய்யூப் நபியின் வாழ்க்கை மூலம் நாம் அறியலாம்.
உலக மக்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் பல நபிமார்களை அனுப்பினான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப்பட்ட நபிகள் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பையும், அந்தஸ்தையும் அளித்தான்.

அந்த வரிசையில் அனுப்பப்பட்ட அய்யூப் நபிகளை உலகின் மிக செல்வந்தராக, பெரும் ஆட்சி அதிகாரங்களோடு வாழச்செய்தான். மிக உயர்ந்த நிலையில் இருந்த போதும் அய்யூப் நபிகள் ஒரு வினாடி நேரம் கூட அல்லாஹ்வை மறக்கவில்லை. எப்பொழுதுமே இறைவன் நினைப்பில் அவனை துதிசெய்து கொண்டே இருந்தார். இது சைத்தானுக்குப் பிடிக்கவே இல்லை. அல்லாஹ்விடம் இதுபற்றி வாக்குவாதம் செய்தான் சைத்தான்.

‘இறைவனே, உன் அடியானுக்கு சகல வசதிகளையும் நீ கொடுத்திருக்கும் போது அவன் உன்னை வணங்குவதில் என்ன ஆச்சரியம் உள்ளது. அவனுக்கு நீ சோதனையை, வேதனையைக் கொடு. அப்போது தான் அவனது இறைபக்தி எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதை நீ அறிய முடியும். எனக்கு நீ அனுமதி கொடுத்தால் அவனுக்கு சோதனைகளைக்கொடுத்து உன் நினைவில் வாழும் அவரை மாற்றிக்காட்ட என்னால் முடியும்?’ என்றான்.

அல்லாஹ் கூறினான்: “அய்யூப்பின் இறைபக்தியை நீ அவ்வளவு எளிதாக எண்ணி விடாதே. உனக்கு அனுமதி தருகிறேன், அவரை எல்லா நிலைகளிலும் சோதித்துப் பார். அவரின் நம்பிக்கையை மாற்ற உன்னால் மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும்”.

ஆனால், சைத்தான் ‘என்னால் முடியும்’ என்றான்.

அதன் பின்னர் சைத்தான், அய்யூப் நபியிடம் சென்று தனது துர்போதனைகளை தொடங்கினான். ‘உன் விதியின்படி எழுதப்பட்ட அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைத்துள்ளது. இதில் இறைவனின் பங்கு என்ன உள்ளது? ஏன் எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டு இருக்கிறாய்?’.

அய்யூப் நபிகள், “விரட்டப்பட்ட சைத்தானின் அத்தனை கேடுகளிலிருந்தும் அல்லாஹ்வே உன்னிடமே நான் உதவி தேடுகிறேன்” என்று சொல்லியவர்களாக, “ஏ சைத்தானே! என்னை விட்டுச் சென்று விடு. இனிமேலும் என் முன்னால் வந்தால் மிகவும் கடுமையான தண்டனையை எதிர்நோக்க வேண்டியதிருக்கும்” என்றார்கள்.

“அய்யூபே! நீங்கள் என்னை ஒதுக்கினாலும், நானே உங்களுக்கு பெரும் சோதனையைத் தரமுடியும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று சொல்லி விட்டு சைத்தான் கோபமாய் வெளியேறி விட்டான்.

அல்லாஹ் தனக்கு வழங்கிய அனுமதியைக் கொண்டு, அய்யூப் நபிகளை சோதிக்கத்தொடங்கினான் சைத்தான். அவரது செல்வங்கள் அத்தனையுமே நெருப்பின் துணை கொண்டு எரித்து சாம்பலாக்கி விட்டான். ஒரே நாளில் எல்லாம் இழந்து ஏழையாய் நடுவீதிக்கு வந்து விட்டார் அய்யூப் நபிகள்.

இத்தனை பாதிப்பு ஏற்பட்ட போதும் அய்யூப் நபிகள் கொஞ்சம் கூட கவலை கொள்ளவில்லை, கலங்கவில்லை. “அத்தனையுமே அல்லாஹ் கொடுத்தது. அவனிடமே திரும்பிச் சென்றிருக்கிறது. அல்லாஹ் நாடினால் மீண்டும் திரும்ப வரலாம்” என்றார்கள். அல்லாஹ்வின் நினைப்பில் இருந்து அவர்கள் கொஞ்சம் கூட விலகவில்லை. வணக்க வழிபாடுகள் முன்பைவிட அதிகமாகியதே தவிர குறையவில்லை.

அய்யூப் நபியவர்களுக்கு பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொரு பிள்ளையாக அத்தனைப் பேரையும் சைத்தான் மரணிக்கச் செய்தான். அடுத்தடுத்து பிள்ளைகளை இழந்து துயரத்தில் தவித்தாலும், அய்யூப் நபிகளின் மனம் இறைவனை விட்டு விலகவில்லை. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை அதிகரித்தது.

எதற்கும் கலங்காத அய்யூப் நபியின் உறுதியைக் கண்டு கடும் கோபம் கொண்ட சைத்தான், தீராத நோயைக்கொண்டு அவரை சோதித்தான். கடுமையான அந்த நோய் தாக்குதலிலும் அய்யூப் நபிகள் பொறுமை காத்தார்கள். இறைவன் மீது கொஞ்சமும் நம்பிக்கையை இழக்கவில்லை.

அய்யூப் நபியின் தீராத வியாதியைப் பற்றி அறிந்த ஊர் மக்கள், அந்த நோய் நம்மையும் பாதித்து விடுமோ என்ற பயத்தில் அவரை ஊர் எல்லையான கடற்கரையில் ஒதுங்கி இருக்குமாறு கூறினார்கள்.

அய்யூப் நபிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது எழுபது ஆண்டு காலம். ஆனால் நோய்வாய்ப்பட்டுக் கஷ்டப்பட்டது பதினான்கு ஆண்டு காலம். நாளுக்கு நாள் சிரமம் கடுமையாகி கொண்டே போனது. அந்த நிலையிலும் இறைவனை வணங்குவதில் அவர்கள் பின்தங்கவில்லை. கஷ்டங்கள் எந்த அளவுக்கு அதிகமானதோ அந்த அளவுக்கு இறையச்சமும், வணக்க வழிபாடுகளும் அதிகரித்தது.

“இறைவா! எனது உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டாலும் அவை ஒன்றும் உன்னை ‘திக்ரு’ செய்வதில் இருந்து என்னை திசை திருப்பவில்லை. ஆனால் என் நாவை பாதிக்கச் செய்து விடாதே. அதன் மூலம் தானே நான் உன்னை போற்றி புகழ வேண்டும்” என்றார்கள்.

அய்யூப் நபி அவர்களின் மனைவியோ தன் கணவருக்கு தொண்டு செய்வதை பாக்கியமாக கருதினார்கள். ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து கிடைக்கும் அற்ப தொகையின் மூலம் அன்றாட வாழ்க்கையைத் தள்ளினார்கள். அதனையும் தடை செய்தான் சைத்தான். தொற்று நோய் இருக்கும் கணவரிடம் இருந்து வருவதால் அவர்களும் நோய் பரவ காரணமாகி விடுவார்கள் என்று சொல்லி அவர்களின் வேலை வாய்ப்பையும் பறித்து விட்டான்.

ஒரு நாள் கடுமையான பசி. ஊருக்குள் சென்ற மனைவி, அந்த காலத்தில் வணிகப் பொருளாய் கருதப்பட்டு வந்த தன் தலைமுடியை இழந்து உணவை வாங்கி வந்தார்கள். கடைசி வாய்ப்பு அதுவும் பயன்படுத்தப்பட்டு விட்டது. இதற்கு மேல் என்ன செய்வது என்ற நிலையில் சைத்தான் மீண்டும் மனைவியை அணுகினான்.

“பதினான்கு ஆண்டு காலம் உன் கணவனுக்கு பணிவிடை செய்து விட்டாய். இனி மேலும் அவருக்கு சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. என்னிடம் ஒரு மருந்து இருக்கிறது. அதனை உட்கொண்டால் உடனே சுகம் கிடைக்கும். ஆனால் ஒரு நிபந்தனை, ‘இந்த நோய் இறைவனால் அல்ல, இந்த மருந்தால் தான் குணமாகியது’ என்று உன் கணவன் சொல்ல வேண்டும்” என்றான்.

மனைவியின் மனம் சற்று தளர்ந்தது. கணவனிடம் சென்று முறையிட்டார்கள். அய்யூப் நபிகள் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். ‘மருந்தைக் கொண்டு இறைவனுக்கு இணை வைக்கச் சொல்கிறாயா? நோயைத் தருபவனும் அவனே, அதனை நிவர்த்தி செய்பவனும் அவனே’ என்று சொல்லிவிட்டு இறைவனை நோக்கி, “நிச்சயமாக நோய் என்னைப் பிடித்து கொண்டது, அதை நீக்கி விடு. நீயோ கிருபையாளர்களில் எல்லாம் மகா கிருபையாளன்” என்று பிரார்த்தனை செய்தார். (திருக்குர்ஆன் 21:83)

அதைத் தொடர்ந்து, “இறைவா, நிச்சயமாக சைத்தான் எனக்கு துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 38:41)

தனது அடியானின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவருக்கு உடனே அருள்புரிந்தான். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

(அதற்கு நாம்) “உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்” (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித்தோடியது. அவரை நோக்கி) “இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்” என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.) (திருக்குர்ஆன் 38:42).

“பின்னர் நம்முடைய அருளாகவும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு பிரிந்திருந்த குடும்பத்தையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள் புரிந்தோம்” (திருக்குர்ஆன் 38:43)

சைத்தானின் அத்தனை முயற்சிகளும் தோற்று விட்டன. அய்யூப் நபியின் உறுதிப்பாட்டை அவனால் குலைக்க முடியவில்லை. எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தாலும் அல்லாஹ்வின் நினைப்பிலிருந்து அய்யூப் நபிகள் விலகவில்லை. இறைநம்பிக்கையில் உறுதியாய் இருந்தார்கள்.

அல்லாஹ் அந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிடும் போது ‘நபிமார்களிலேயே இத்தனை கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தும் கொஞ்சம் கூட கலங்காமல் பொறுமை காத்தார், பொறுமையின் பொக்கிஷம் அய்யூப் நபிகள்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறான்.

சோதனைகள் வரும்போது, அதை ஏற்றுக்கொண்டு, இறைவனை முழுமையாக நம்பி பொறுமையாக இருக்காமல், இறை சிந்தனையை விட்டு விலகும் குணம் கொண்டவர்கள் தான் அதிகம் உள்ளனர். எத்தகைய துன்பம் வந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொறுமையை கையாள வேண்டும் என்ற படிப்பினையை அய்யூப் நபியின் வாழ்க்கை மூலம் நாம் அறியலாம். 
Tags:    

Similar News