செய்திகள்
புலவர் புலமைப்பித்தன்

புலவர் புலமைப்பித்தன் காலமானார்

Published On 2021-09-08 04:28 GMT   |   Update On 2021-09-08 06:12 GMT
கவிஞர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் (வயது86). இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இன்று காலை 9.33 மணிக்கு கவிஞர் புலமைப்பித்தன் மரணம் அடைந்தார்.

கவிஞர் புலமைப்பித்தன் கடந்த 1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமசாமி. தமிழ் மீது உள்ள ஆர்வத்தாலும், திராவிட கொள்கைகளில் மீதுள்ள பற்றாலும் தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார். அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.


கவிஞர் புலமைப்பித்தன் சினிமாவில் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதியுள்ளார். குடியிருந்த கோவில் படத்தில் வரும் ‘நான் யார் நான் யார் நீ யார்’, இதயக்கனி படத்தில் வரும் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ உள்ளிட்ட பல பாடல்களை எழுதி உள்ளார்.

கமல்ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி படத்தில் ‘நஞ்சை உண்டு புஞ்சை உண்டு’, நாயகன் படத்தில் ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். மொத்தம் 200 படங்களுக்கு மேல் அவர் பாடல் எழுதியுள்ளார். அவர் கடைசியாக 2015-ம் ஆண்டு வடிவேலு நடித்த எலி படத்துக்கு பாடல்கள் எழுதினார்.

அ.தி.மு.க.வில் அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் மிக நெருக்கமாக இருந்தார்.

Tags:    

Similar News