உள்ளூர் செய்திகள்
7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பாடகரை கடத்தி நகை பணம் பறிப்பு

Published On 2022-01-13 10:14 GMT   |   Update On 2022-01-13 10:14 GMT
மதுரையில் பாடகரை கடத்தி நகை பணத்தை பறித்துச் சென்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

மதுரை உத்தங்குடி ஸ்ரீராம் நகர், அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த முகிலன்(வயது 23) வக்கீல். இவருடன் பிச்சைக்கண்ணு என்பவர் தங்கி உள்ளார். பின்னணி பாடகரான இவர், மதுரையில் இன்னிசைக் கச்சேரி நிறுவனம் நடத்திவருகிறார்.

இருவரும் நேற்று வீட்டில் இருந்தனர். அப்போது 6 பேர் அடங்கிய மர்ம கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தது. அவர்கள் பிச்சைக் கண்ணுவை உருட்டுக் கட்டையால் தாக்கினர். பின்னர் அந்த கும்பல் முகிலனை அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பிச்சை கண்ணுவை கடத்திச் சென்றது.

இது குறித்து முகிலன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அப்போது பிச்சைக்கண்ணுவின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் கடத்தல் கும்பல் பாலமேடு பகுதியில் திரிவது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பிச்சைக்கண்ணுவுடன் 6 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி பாலமுருகன்(29), சென்னை அண்ணாநகர் மணிமாறன்(27), சென்னை பாடி பஜனை கோவில் தெரு சக்திவேல்(33), சென்னை கேளம்பாக்கம் ஆபிரகாம்(33), ஆலத்தூர் அன்னை மீனாட்சி நகர் கார்த்திக்(33), புதூர் இ.எம்.ஜி. நகர் அருண்குமார்(28), கருப்பாயூரணி அரவிந்த் என்பது தெரியவந்தது. விசாரணையில் பிச்சைக்கண்ணுவுக்கும், கடத்தல் கும்பலுக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இதையடுத்து தனிப் படை போலீசார் பிச்சைக்கண்ணுவை கடத்தி நகை&பணம் பறித்த மேற்கண்ட 7 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News