செய்திகள்
கைது

குமரியில் 13 இடங்களில் மறியல்- ஆயிரக்கணக்கானோர் கைது

Published On 2021-09-27 10:37 GMT   |   Update On 2021-09-27 10:37 GMT
குமரி மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் குமரி மாவட்டத்தில் இன்று 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் முன்பு உள்ள வங்கி முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்க மோகனன், எல்.பி.எப். மாநில துணைச்செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயல் தலைவர் ஆல்பர்ட், ஹெச்.எம்.எஸ். மாநில துணைச்செயலாளர் ஸ்ரீகுமார், எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் ஜெரால்டு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். விஜய் வசந்த் எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் அரைமணி நேரம் அண்ணா பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள் மற்றும் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.

இதே போல் தக்கலை, ஆரல்வாய்மொழி, கருங்கல், கொட்டாரம், ராஜாக்கமங்கலம், திங்கள்நகர், குலசேகரம், அருமனைம் மேல்புறம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Tags:    

Similar News