செய்திகள்

கவிமணி உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு மணிமண்டபம்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Published On 2019-02-14 09:11 GMT   |   Update On 2019-02-14 09:11 GMT
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, முத்தரையர், வி.கே.பழனிசாமி கவுண்டர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #ManiMandapam
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. எளிமையான தோற்றமும், ஞானத்தின் உச்சமும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் கொண்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைகள் விரும்புகின்ற கவிதைகளைத் தந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அன்னாருக்கு அம்மா கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு உருவ வெண்கலச் சிலையினை அமைத்து பெருமை சேர்த்தார்.



தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மலரும், மாலையும் சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அன்னாருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.

2. கி.பி.7-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் களம் பல கண்டு, வெற்றிகள் பல கொண்டு ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். அவரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் 1996-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகரில் அம்மா அன்னாருக்கு அரசு சார்பில் சிலை ஒன்றை நிறுவினார்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.

3. இரட்டைமலை சீனிவாசன் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர் என பன்முகங்களைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்தவர். அவருடைய சேவையை பாராட்டி, அன்னாருக்கு ‘ராவ் சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கி கவுரவப்படுத்தியது.

அன்னாரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.

4. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம், ஆழியாறு அணைக்கட்டுத் திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். அவர் சட்டமன்ற மேலவை துணைத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று வி.கே.பழனிசாமி கவுண்டரை சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. வழக்கறிஞராக பணியினைத் தொடங்கி, சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணிபுரிந்து, ஆங்கிலேயே அரசால் “ராவ் பகதூர்” மற்றும் “சர்” பட்டங்களையும் பெற்றவர் சர். ஏ.டி.பன்னீர்செல்வம்.

நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட அன்னாருக்கு அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

6. நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயகர்.

இன்றளவும் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழ்கின்ற அக்கால்வாயை அமைத்த அன்னாரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று அல்லாள இளைய நாயகருக்கு ஜேடர் பாளையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

7. பூலித்தேவன் படையில் படைவீரனாகவும், படைத் தளபதியாகவும் இருந்த விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டி வீரனுக்கு 2016-ம் ஆண்டு, அம்மா மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார். அன்னாரது பெருமையை மேலும் சிறப்பிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணி மண்டபத்தை 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.

8. நேர்மை, வீரம், புத்திக்கூர்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டு, வீரபாண்டிய கட்ட பொம்மனின் வீரத் தளபதியாக விளங்கியவர் வீரன் சுந்தரலிங்கம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையருக்கு எதிராக முதல் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தியவர் வீரன் சுந்தரலிங்கனார். அன்னாருக்கு 14.6.2005 அன்று தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் மணி மண்டபம் அமைக்க ஆணை வெளியிட்டு அம்மா பெருமை சேர்த்தார். அவருக்கு மேலும் பெருமை சேர்க்க அம்மாவின் அரசு கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தை 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே அமைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ManiMandapam
Tags:    

Similar News