செய்திகள்
கேஎஸ் அழகிரி

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2019-09-07 07:04 GMT   |   Update On 2019-09-07 07:04 GMT
சி.பி.எஸ்.இ. 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்ந்து இடம்பெறுவதும் அதை எதிர்த்து அரசியல், சமுதாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர் கதையாகி வருகின்றன.

கடந்த காலங்களில் உழைப்பால் உயர்ந்த நாடார் சமுதாயத்தினரை இழிவு படுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பாடப்புத்தங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்கியது.

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையில், 6-ம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் எந்த சாதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரை ‘தலித்’ என்று அடையாளப்படுத்துகிற வகையில் கருத்து இடம் பெற்று இருக்கிறது. அதேபோல், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு ‘தீண்டத்தகாதவர்’; என்று பதில் கூறுகிற வகையில் மற்றொரு கருத்தும் அதில் இருக்கிறது. மேலும் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் பாடப்புத்தகங்களில் கருத்துக்கள் அமைந்துள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது மத்திய பா.ஜ.க. அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை புகுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே இதை கருதவேண்டி இருக்கிறது. இத்தகைய கடுமையான ஆட்சேபகரமான கருத்துக்கள் பாடப்புத்தகங்களில் எப்படி இடம்பெற்றன என்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உரிய விளக்கத்தைத் தரவேண்டும்.

இந்திய மக்களால் மிகவும் போற்றப்பட்ட அரசமைப்பு சட்டத்தின் தந்தையாக கருதி மதிக்கப்பட்ட அம்பேத்கரை சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தின் மூலமாக இழிவுபடுத்தப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கண்டனத்துக்குரிய பகுதிகளை உடனடியாக நீக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News