செய்திகள்
கோப்புபடம்.

ஜி.எஸ்.டி. வரி விகித குழப்பத்திற்கு தீர்வு

Published On 2021-11-22 10:26 GMT   |   Update On 2021-11-22 10:26 GMT
டையிங் மற்றும் பிரிண்டிங் சேவைகளுக்கான வரி விகிதம் எவ்வளவு என்கிற குழப்பம் நிலவி வருகிறது.
திருப்பூர்:

மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆயத்த ஆடை துறைக்கான ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் புதிய வரி விகிதம் அமலுக்கு வருகிறது.

ஆடைகளுக்கு சாயமேற்றுதல் (டையிங்) மற்றும் பிரிண்டிங் சேவைகள் 5 சதவீத வரி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரு சேவைகளும் எத்தனை சதவீத வரி விகித பிரிவில் இடம்பெறும் என அறிவிக்கப்படவில்லை. இதனால் திருப்பூர் பகுதி சாய ஆலை, பிரிண்டிங் துறையினர் மத்தியில் குழப்பம் நிலவியது. 

இந்த குழப்பத்தை ஆடிட்டர்கள் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:-

டையிங் மற்றும் பிரிண்டிங் சேவைகளுக்கான வரி விகிதம் எவ்வளவு என்கிற குழப்பம் நிலவி வருகிறது. சேவைகள் பிரிவு 26 (ஐ.டி.,) -ல் குறிப்பிட்டுள்ள ‘இதர ஜாப்ஒர்க்‘ பிரிவில் சேர்க்கப்பட்டு, 12 சதவீத வரி பட்டியலில் டையிங், பிரிண்டிங் இடம்பெறுமா? பிரிவு 26 (ஐ.வி.,)ல் குறிப்பிட்டுள்ள பிற நிறுவனங்களின் பொருட்கள் மேல் செய்யப்பட்ட உற்பத்தி சேவை பிரிவில் சேர்க்கப்பட்டு 18 சதவீத வரி பட்டியலில் இடம்பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

இந்த சட்டப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக அலசிப்பார்த்ததில் 12 சதவீத வரி விகிதம் கொண்ட பிரிவு 26 (ஐ.டி.,) தான் பிரிண்டிங் மற்றும் டையிங் சேவைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

பிரிண்டிங், டையிங் நிறுவனங்கள் மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு 18 சதவீத வரி செலுத்துகின்றன. அதேநேரம் அந்நிறுவனங்கள் அளிக்கும் சேவைக்கான வரி 5 சதவீதமாக உள்ளது. 

இதனால் உள்ளீட்டு வரியை முழுமையாக திரும்ப பெறமுடியாமல் அரசிடம் சென்று தேக்கமடைந்து வருகிறது.12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளதால்  உள்ளீட்டு வரி அரசிடம் தேங்காது. இதனால் இந்நிறுவனங்களின் நிதிச்சுமைகள் தீரும். 

எனவே  ஜி.எஸ்.டி., வரி விகித உயர்வு வரவேற்கப்பட வேண்டிய திருத்தமாக கருதப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News