செய்திகள்
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹசன் அலி

ஹசன் அலி அபார பந்து வீச்சு - ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2021-05-01 19:53 GMT   |   Update On 2021-05-01 19:53 GMT
ஹராரே டெஸ்டில் ஹசன் அலி சிறப்பாக பந்து வீச ஜிம்பாப்வே அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
ஹராரே:

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது.

டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அபித் அலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்ரான் பட் 91 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ரிஸ்வான் 45 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் டக் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பாக ஆடிய பவாத் ஆலம் சதமடித்து அசத்தினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 120 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது.



பவாத் ஆலம் 108 ரன்னுடனும், ஹசன் அலி 21 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.  ஜிம்பாப்வே அணியை விட 198 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹசன் அலி 30 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவாத் ஆலம் 140 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 133 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே அணி சார்பில் முசராபானி 4 விக்கெட்டும், டொனால்ட் டிரிபனோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 250 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 134 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முசகண்டா 43 ரன்கள் எடுத்தார். பிரெண்டன் டெய்லர் 29 ரன்னும், கெவின் கசூவா 28 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், நுமன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நாயகன் விருது இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News