செய்திகள்
ஐகோர்ட்டு

பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-08-06 19:39 GMT   |   Update On 2020-08-06 19:39 GMT
பதஞ்சலி நிறுவனத்துக்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், ஆருத்ரா என்ஜினீயர்ஸ் என்ற தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கனரக தொழிற்சாலைகளில் எந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம். கொரோனில் என்ற பெயருக்கு வணிக சின்னம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 2027-ம் ஆண்டு வரை செல்லத்தக்கது ஆகும்.

இந்நிலையில், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை ஆகியவை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி, அந்த மருந்துக்கு ‘கொரோனில்’ என்று பெயர் சூட்டி விளம்பரம் செய்து வருகின்றன. எங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்துடன் கூடிய பெயரை பயன்படுத்த இந்த இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரி பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மீண்டும் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயரை பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் பயன்படுத்துகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி, கொரோனாவில் மாத்திரையை விளம்பரம் படுத்துகின்றன. இந்த மாத்திரைக்குரிய பெயரை பதிவு செய்ய இப்போதுதான் ஆரம்பக்கட்ட வேலையை தொடங்கியுள்ளது. எனவே ‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த இந்த இரு அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்கிறேன். இந்த வழக்கு விசாரணையின்போது, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி தொழில் செய்யும் நிறுவனம் என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மாத்திரை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து இல்லை. சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளால் பாதிப்பு வராமல் இருக்க எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தக்கூடிய மாத்திரையாகும். இருந்தாலும், இந்த வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை பயன்படுத்தி, கொரோனா வைரசுக்கு மாத்திரை என்று கூறி பெரும் லாபத்தை பெற இந்த நிறுவனம் முயற்சிக்கிறது. அதேநேரம், இந்த இக்கட்டான காலத்தில் லாபநோக்கம் இல்லாமல் பல அமைப்புகள் மக்களுக்கு சேவை செய்வதை பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் உணர வேண்டும்.

அதனால் ரூ.10 லட்சம் வழக்குச்செலவு (அபராதம்) விதிக்கிறேன்.

இந்த தொகையில், ரூ.5 லட்சத்தை அடையாறு புற்றுநோய் சிகிச்சை ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு ரூ.5 லட்சத்தை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிக்கும் வழங்கவேண்டும். இந்த தொகையை வருகிற 21-ந்தேதிக்குள் செலுத்தி விட்டு, அதற்குரிய ஆதாரமான ரசீதுகளை ஐகோர்ட்டில் வருகிற 25-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News