செய்திகள்
விபத்து

ஆரல்வாய்மொழி அருகே விபத்து- 2 கல்லூரி மாணவர்கள் காயம்

Published On 2019-11-01 12:03 GMT   |   Update On 2019-11-01 12:03 GMT
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்து 2 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி:

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் காலை 9.30 மணி அளவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தேவசகாயம் மவுண்ட் விலக்கில் திருப்பத்தில் வந்தபோது எதிரே 2 மோட்டார் சைக்கிள்கள் வந்து கொண்டிருந்தது.

இதில் ஒரு மோட்டார் சைக்கிளை நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த ஹெரால்டு (வயது 20) என்பவர் ஓட்டி வந்தார். அவரது பின்னால் சுசீந்திரத்தை சேர்ந்த வேல்முருகன் (20) அமர்ந்திருந்தார். கல்லூரி மாணவர்களான அவர்கள் இருவரும் தேர்வு முடிவு பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக அரசு பஸ் கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (51) என்பவர் மீதும் பஸ் மோதியது.

இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் விழுந்தது. இதில் மாணவர் ஹெரால்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இன்னொரு மாணவரான வேல்முருகன் லேசான காயத்துடன் தப்பினார். அதிர்ஷ்டவசமாக சுப்பிரமணியனுக்கு காயம் எதும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் ஹெரால்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைதுறை ரோந்து போலீசாரும் ஆரல்வாய்மொழி போலீசாரும் போக்குவரத்தை சரி செய்தனர்.
Tags:    

Similar News