ஆன்மிகம்
அத்திவரதர் நேற்று 8-வது நாளாக ரோஜாப்பூ நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சீபுரத்தில் ரோஜாப்பூ நிற பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி

Published On 2019-07-09 03:12 GMT   |   Update On 2019-07-09 03:12 GMT
காஞ்சீபுரம் அத்திவரதர் நேற்று 8-வது நாளாக ரோஜாப்பூ நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை கண்டு தரிசித்தனர்.
உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர், நேற்று 8-வது நாளாக வசந்த மண்டபத்தில் ரோஜா பூ நிறத்தில் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வண்ண வண்ண மலர்களால் அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 5.05 மணியளவில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் வர தொடங்கினர். வருகை தந்திருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் நேற்று தமிழக ரெயில்வே துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ராமானுஜ ஜீயர், நடிகர் மனோபாலா ஆகியோரும், அத்திவரதரை கண்டு தரிசனம் செய்தனர்.

அதிகாலையில் இருந்தே பின்கோபுர வாயிலில் இருந்து இலவச தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். ஆனால், வந்திருந்த பக்தர்களுக்கு முறையான குடிநீர் வசதி கூட செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வயதான பெண்கள் கடும் வெயிலில் நின்றவர்கள் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பக்தர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

தரிசனம் செய்த பக்தர் ஒருவர் கூறும்போது, ‘தமிழக அரசு, அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், குடிநீர், சுகாதார வசதி, கழிப்பிட வசதி செய்துள்ளதாகவும், செய்தி வெளியானது. ஆனால், நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஆகியவைகளை செய்து தர வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதனால் சிலர் மனமுடைந்து அத்திவரதரை தரிசிக்காமல் பக்தர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும், தமிழக அரசு செய்து தர உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

அத்திவரதரை தரிசிப்பதற்காக, காஞ்சீபுரத்துக்கு வந்த போலந்து நாட்டை சேர்ந்த 7 பேர் மேற்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு வந்தனர். ஆனால், வேற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனக்கூறி அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
Tags:    

Similar News