ஆன்மிகம்
பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை பக்தர்கள் இன்றி தொடங்கியது

Published On 2020-08-04 08:26 GMT   |   Update On 2020-08-04 08:26 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. வழக்கமாக இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

ஆடி களப பூஜையையொட்டி காலையில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வெள்ளி குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து களபம் நிரப்பப்பட்ட வெள்ளி குடத்தை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல், பத்மநாபன் ஆகியோர் நடத்தினர்.

பின்னர், தங்க ஆபரணங்கள், வைரக்கீரிடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க அங்கிக்கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயராட்சை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு அம்மன் பல்லக்கில் உள் பிரகாரத்தில் 3 முறை சுற்றி வலம் வருதல், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது.

ஆடி களபபூஜை வருகிற 14-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. 15-ந்தேதி காலை ஆதிவாச ஹோமம் என்ற பிரமாண்ட யாகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், திருவாவடுதுறை ஆதீனம் சுசீந்திரம் கிளை மட ஆய்வாளர் நாதன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News