உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

காங்கிரசுக்கு உரிய வார்டுகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்- தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Published On 2022-01-29 05:40 GMT   |   Update On 2022-01-29 05:40 GMT
தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வார்டுகளை ஒதுக்கி கொடுக்க முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

இதனால் ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி பேச்சு வார்த்தையை விரைந்து முடித்து வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நெருக்கடி அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் தி.மு.க. கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலிலும் இடம் பெற விரும்புகின்றன. இதற்காக தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் அந்தந்த கூட்டணி கட்சி பிரமுகர்கள் ‘லிஸ்ட்’ கொடுத்து விருப்பமான வார்டுகளை கேட்டு வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் அதிகமான தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்க காங்கிரஸ் முதலில் திட்டமிட்டிருந்தது.

இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.

பின்னர் அவர் கட்சிக்காரர்களிடம் பேசும்போது காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீத இடங்களாவது கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இதுவரை அந்த அளவுக்கு காங்கிரசுக்கு வார்டுகள் ஒதுக்கப்படவில்லை.

சென்னையில் 21 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தொகுதிக்கு 1 வார்டு வீதம் ஒதுக்கினாலும் 21 வார்டுகள் காங்கிரசுக்கு கிடைத்திருக்க வேண்டும் என காங்கிரசார் கூறி வருகின்றனர்.

ஆனால் 14 தொகுதிகள் தான் காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க. மாவட்டக்கழக செயலாளர்கள் இதுவரை முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த 2014 தேர்தலின்போது 14 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கியது போல் இப்போதும் ஒதுக்க முடிவு செய்து விடுவார்களோ என காங்கிரசார் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காங்கிரசில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர்களுக்கு மீணடும் அந்த வார்டுகளை ஒதுக்கி தருமாறு
தி.மு.க.
விடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அந்த வார்டுகளும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது என காங்கிரசார் கூறி வருகின்றனர்.

கூட்டணியில் 15 சதவீதம் என்றால் சென்னையில் 30 வார்டுகள் காங்கிரசுக்கு கிடைத்துவிடும். ஆனால் 14 வார்டு வாங்கவே போராட வேண்டி உள்ளதாகவும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 வார்டு என்றாலும் 21 வார்டுகள் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கூட இன்னும் வார்டு ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றும் காங்கிரசார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த தகவல் தெரிய வந்துள்ளதால் அவர் தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வார்டுகளை ஒதுக்கி கொடுக்க முன்வர வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே சென்னையில் காங்கிரசுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கப்படும் என்ற விவரம் இன்னும் 2 நாட்களில் தெரிய வந்து விடும். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் வார்டு விவரங்கள் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு விடும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.



Tags:    

Similar News