செய்திகள்
இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் (மாதிரிப்படம்)

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்

Published On 2019-10-03 10:33 GMT   |   Update On 2019-10-03 12:19 GMT
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி பல்வேறு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படது முதல், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நிகழுமானால் ஒரே வாரத்திற்குள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை விட அதிகமானோர் உயிரிழப்பர் என தெரிவித்துள்ளது. அதாவது 5 கோடி முதல் 12.5 கோடி வரையிலான மக்கள் கொல்லப்படுவர் என தெரிவித்துள்ளது.

இன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒவ்வொன்றும் சுமார் 150   அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன, மேலும் 2025 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தியா-பாகிஸ்தான் போர் உலகில் சாதாரண இறப்பு விகிதத்தை இரட்டிப்பாக்கக்கூடும் , இது உலக வரலாற்றில்  முன்னெப்போதும் இல்லாத ஒரு போர் ஆக இருக்கும்" என இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலராடோ போல்டர் பல்கலைக்கழக பேராசிரியர் பிரையன் டூன் கூறியுள்ளார். 

2025 ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் 400 முதல் 500 ஆயுதங்கள் இருக்கும். இருநாடுகளிடையே போர் மேகம் சூழும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிகழந்தால், அந்த அணு ஆயுதங்கள் வெடித்ததால் ஏற்படும் கரிப்புகை மற்றும் புகையில் உள்ள கார்பன் துகள்கள் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பிக்கும். மேலும் வளிமண்டலத்தை கடுமையாக பாதிக்கும். அதனால் 15 முதல் 30 சதவீதம் மழைப்பொழிவு குறையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இதுபோன்ற அணு ஆயுத போர்கள், நிகழ்த்தப்படும் இடங்களை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் அச்சுறுத்தும். உலகில் 9 நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்துள்ளன. ஆனால் அவற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நிகழ்ந்தால் நேரடி விளைவாக 5 முதல் 12.5 கோடி மக்கள் இறக்கக்கூடும். மேலும் வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு விதமான பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்படும்” என மற்றொரு ஆய்வாளர் ஆலன் ரோபோக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News