செய்திகள்
சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

தமிழக அமைச்சர் முன்னால் கைகட்டியபடி பேசினாரா திருமாவளவன்?- சர்ச்சையும் உண்மையும்

Published On 2021-08-02 13:08 GMT   |   Update On 2021-08-02 13:08 GMT
குதர்க்கவாதிகள், வெறுப்பை உமிழ்பவர்கள் என்னை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதாக திருமாவளவன் கூறினார்.
சென்னை:

கடந்த 31 ஆம் தேதி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சந்தித்தார். அன்று அமைச்சர் ராஜகண்ணப்பனுக்குப் பிறந்த நாள் என்பதால், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திருமா. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளன.

அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்க திருமாவளவன் அவர் எதிரில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் திருமா, பவ்யமாக கைகட்டியபடி அமர்ந்திருப்பது போன்ற ஒரு போட்டோவை பலர் பகிர்ந்து, 'இது தான் திமுக கடைபிடிக்கும் சுயமரியாதையா?' என்றும் திருமாவை, 'இப்படி கைகட்டி உட்காருவதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் கொள்கையா?' என்கிற ரீதியிலும் சாடினார்கள்.

மேலும் சிலர், ராஜகண்ணப்பன் சாதிய வன்மத்தோடு இப்படி நடந்து கொண்டார் என்றெல்லாம் எல்லைமீறிய பதிவுகளை இட்டனர்.

இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப, திருமாவளவன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அருகில் அந்த சமயத்தில் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போட்டோக்களும், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறும் போட்டோக்களும் வெளிவந்தன. வேண்டுமென்றே ஒரேயொரு புகைப்படத்தை மட்டும் வெறுப்பை உமிழும் நோக்கில் சிலர் விஷமத்தன்மையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் என்று விசிக தரப்பு சாடியது.



இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன் கூறியதாவது, 'என்னை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவருக்குப் பக்கத்தலிருந்த நாற்காலியில் அமரும்படி மூன்று முறை கூறினார். ஆனால், அந்த நாற்காலி தள்ளி இருந்தது. அது எனக்குப் பேச வசதியாக இல்லை. இதனால் நான்தான் பிளாஸ்டிக் நாற்காலியைக் கேட்டு வாங்கிப் போட்டேன்.

நான் இன்னொருவருக்கு எதற்குப் பணிந்துபோக வேண்டும். எனக்கு எந்த தேவையும் இல்லை. ஆனால் குதர்க்கவாதிகள், வெறுப்பை உமிழ்பவர்கள் என்னை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிட்டுள்ளார்கள். அதை நான் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை கொண்டவர்கள் விமர்சித்தால் மட்டுமே அதை பொருட்படுத்துவேன்.

நான், என் அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன், என் தோழர்கள் முன்னிலையிலும் கூட நான் கைகட்டி நிற்பேன். இது என்னுடைய சுபாவம்தான். இதைக் கூட அரசியல் ஆக்குபவர்கள், அவர்களின் ஆற்றாமையைத்தான் வெளிக்காட்டி உள்ளனர்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
Tags:    

Similar News