லைஃப்ஸ்டைல்
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...

Published On 2019-08-20 03:17 GMT   |   Update On 2019-08-20 03:17 GMT
பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை, தொடர்ந்து நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன? ஏன் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்? இதைப்பற்றி ஆராய்ந்தால்தான் பல்வேறு காரணங்கள் தெரியவரும், தீர்வும் கிட்டும், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கு எப்பொழுதும் இரண்டாம் இடமே கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆணாதிக்க வர்க்கத்தில் பெண்களின் அறிவு, திறமை, ஆளுமை மற்றும் ஆற்றலை போற்றுதல் செய்வதை விட்டுவிட்டு சமூகம் அவர்களின் புறத்தோற்றத்தைத்தான் பெரிதாகப் போற்றுகிறது. பெண் ஓர் போகப் பொருள், வீட்டைப் பராமரிக்கவும், குழந்தைகளை கவனிக்கவும், கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவனுக்குப் பணிவிடை செய்யவுமே இருக்கிறாள் என்ற மனநிலைதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், சமூக ஊடகங்களின் தாக்கமும் பெண்களின் சமூக நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது. ஆணுக்கு நிகர் பெண் என்ற சமத்துவ நிலைதான் தற்போது நிலவுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2018-ல் 2,045 வழக்குகள் போக்சோ சட்டத்தின்கீழ் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம்) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,464 வழக்குகள் கற்பழிப்பு வழக்குகள். தமிழ்நாடு போன்ற வளர்ந்த, முதிர்ந்த மாநிலம், சங்ககாலச் சிறப்பையும், முவேந்தர்களின் செங்கோல் தவறாத ஆட்சியின் பெருமையையும், கண்ணகியின் கற்பைப் போற்றிய மாண்பையும், இலக்கிய, இலக்கண செழிப்பையும், தொன்மையான மொழியையும் கொண்ட சமூகத்தில் இவ்வகையான குற்றங்கள் நடைபெறக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். பணி முடித்து இரவில் தங்கும் இடத்திற்கு திரும்பும் போது வாகன ஓட்டிகள் மூலம் ஏற்படும் பாலியல் தொல்லைகளும் உண்டு. இதற்கு வாடகை வாகன நிறுவனங்கள் ஓட்டுனர்களின் பின்புலத்தை விசாரித்து குற்றப்பின்னணியை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை “காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இணையதளங்கள், ஊடகங்கள், இவைகளின் ஆதிக்கம் காரணமாக சிட்டிசன்ஸ் எல்லாம் நெட்டிசன்ஸ்ஆக மாறிவிட்டார்கள். இணையதளம், சேட்ரூம் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் மூலமாக இவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், பரிமாறிக்கொள்ளவும், புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். குறிப்பிடும்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தவறான நோக்கத்துடன் புரிந்துகொள்ளப்பட்டு தவறான எண்ணம் கொண்டவர்களால் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகளுக்குள்ளாகிறார்கள்.

இணைய வலைதளங்களின் அடிப்படை இயல்பு மறைமுகத்தன்மை தான், இதனால் சொந்த விஷயங்கள், குடும்பத்தினரிடம் கூட பகிர முடியாத தகவல்கள் பகிரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். முகநூல் மூலம் தனிப்பட்ட விவரங்கள், அவர்களுடைய நிகழ்கால விவரங்கள் இவற்றைப் பகிர்ந்துகொள்வதன் காரணமாக வீட்டை உடைத்து களவாடிச் சென்ற சம்பவங்கள் பல உண்டு. அது மட்டுமல்ல பயமுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தம் செய்தல் போன்ற குற்றங்களும் நடந்துள்ளன. பல்வேறு சைபர் குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. சைபர் ஸ்டாக்கிங் சைபர் புல்லிங் அதாவது இணையதளத்தில் பின் தொடர்ந்து துன்புறுத்துவது, மிரட்டுவது, பெண்களின் படத்தையும், செல்போன் எண்ணையும் வலைதளத்தில் போடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதிராக சைபர் பொரனோ கிராபி குழந்தை பாலியல் படங்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குற்றங்கள் இணையதளம் மூலமாக நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் 2017-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பெண்கள் வன்முறைக்குள்ளாயிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் குற்றம் இழைத்தால் உடனடியாகப் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் பெண்கள், பெற்றோர்கள் இன்னும் தானே முன்வந்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள், இந்நிலை மாற வேண்டும்.

ஜெப்ரி எப்ஸ்டெயின் ஓர் பிரபலமான அமெரிக்கன். இவருக்கு பல கோடி சொத்துகள், சொந்த விமானங்கள், தீவுகள் உள்ளன. குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை மற்றும் குழந்தை கடத்தல் குற்றங்களுக்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். எனவே குழந்தைகளும், பெண்களும், தெரிந்தவர்களிடம் மற்றும் தெரியாதவர்களிடம் கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சமீபத்தில் தமிழக காவல்துறை பல்வேறு பள்ளிகளுக்கு சென்று இயல்பான அல்லது பாதுகாப்பான தொடல் மற்றும் உள்நோக்கம் மற்றும் தேவையில்லாத தொடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

பொதுவாக இப்படி ஒரு காரணம் சொல்வார்கள் பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதால் தான் ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று. இது முற்றிலும் தவறு. உடை அவர்களது தனிப்பட்ட விஷயம், உடையை பார்த்து எடைபோடுவது பார்ப்பவரின் மனக்கோணல் மற்றும் மாசுப்படிந்த மனம் தான் காரணம். சமீபத்தில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களே புகார் கொடுத்து, அப்பெண்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.

பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சமயத்தில் தற்காப்பிற்காக அவர்களைக் கொல்லவும் சட்டத்தில் இடமுண்டு. இணையதளத்தின் மூலமாகவே பெண்கள் புகார் உடனடியாகத்தரலாம். காவல்நிலையம் அலையத் தேவையில்லை. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இப்படத்தில் காண்பித்தது போல அவர்களின் வழக்கறிஞரே குறுக்கு விசாரணை செய்ய மாட்டார். எனவே நிழல் வேறு நிஜம் வேறு, காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே துணை நிற்பார்கள். என்னதான் விழிப்புணர்வு இருந்தாலும் கடுமையான சட்டங்கள் இல்லை, விசாரணை விரைந்து முடிக்கப்படுவதில்லை, கடுமையான தண்டனைகள் இல்லை என்ற குமுறல்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. ‘போக்சோ’ சட்டம் மிகவும் கடுமையான சட்டம். அதிகப்பட்ச தண்டனை தூக்குத்தண்டனையாகும்.

கோவையில் சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ன் உட்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு ‘போக்சோ’ வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

இது உச்சநீதிமன்றத்தின் கட்டளை. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கித்தரப்படும். எனவே குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்தும். தண்டனை உறுதி என்ற நிலை குற்றம் செய்ய நினைப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தும் என்பார்கள்.

முனைவர் மு.ரவி, ஐ.பி.எஸ்.,
கூடுதல் காவல்துறை இயக்குனர்
(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), சென்னை
Tags:    

Similar News