செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-11-26 04:08 GMT   |   Update On 2021-11-26 07:49 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கடலூர்:

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுபகுதியாக தீவிரமாக நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்துவந்தது. அவ்வப்போது வெயிலும் அடித்தது.

இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கிநின்றது. அந்த மழைநீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தொடர் மழை பெய்யதொடங்கியதால் மீண்டும் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளிலும் நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
Tags:    

Similar News