லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது எப்படி?

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது எப்படி?

Published On 2020-02-13 03:12 GMT   |   Update On 2020-02-13 03:12 GMT
முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதோடு, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உங்கள் உணவில் அனைத்து சத்துக்களும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்;

நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, உயிர்ச்சத்து பி 12 மற்றும்  சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்

பச்சைக் காய் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

உலர்ந்த பழங்கள், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

அதிக இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், குறிப்பாகக் கொய்யா, பேரீச்சம் பழம், அத்திப் பழம் போன்றவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும்

உயிர்ச்சத்து சி இரும்புச் சத்தை உடலில் தக்க வைக்க உதவும். அதனால் கமலாப் பழம், எலுமிச்சை பழம், நாவல் பழம் போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிராக்கோலி, தக்காளி, மிளகு போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உயிர்ச்சத்து பி சத்து நிறைந்த வெண்டைக்காய், முளைக்கட்டிய பயிர்கள், பூசணிக்காய் போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும்.

அதிக கால்சியம் அளவு, இரத்தத்தில் இரும்புச் சத்தை சேர விடாமல் செய்யக் கூடும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில், முடிந்த வரை தேநீர், காபி, மது, கோதுமை உணவுப் பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகமான வகையில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

நாட்டுக் கோழி முட்டை, பருப்பு வகைகள், ஆட்டு இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றிலும் இரும்புச் சத்து நிரம்பி உள்ளது.

இது மட்டுமல்லாது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது அனைத்து சத்துக்களையும் எளிதாகப் பெற உதவும். முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.

Tags:    

Similar News