செய்திகள்
ராஜேஷ் தோபே

தினமும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மந்திரி ராஜேஷ் தோபே

Published On 2021-03-18 02:05 GMT   |   Update On 2021-03-18 02:05 GMT
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் தினசரி லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை :

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமீபநாட்களாக மராட்டியத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது.

அதையடுத்து தடுப்பூசி போடும் பணியை மராட்டிய அரசு வேகப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில், “மார்ச் 12-ந் தேதி வரை மராட்டியத்திற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி மருந்தில் 56 சதவீதத்தை இன்னும் மாநில அரசு பயன்படுத்தவில்லை” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று கூறியதாவது:-

மராட்டிய அரசு தினசரி சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு நான் உரிய மரியாதையுடன் தகவல் கொடுத்துள்ளேன். இதற்காக ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் டோஸ் மருந்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

தற்போது மாநிலத்தில் அடுத்த 10 நாளைக்கு பயன்படுத்தும் அளவுக்கே தடுப்பூசி மருந்து இருப்பில் உள்ளது. கடந்த சில நாட்களாக மராட்டியத்தில் தினசரி லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தும் பணியை இன்னும் அதிகப்படுத்த மேலும் 367 மையங்கள் அமைக்க அனுமதிக்குமாறு மராட்டிய அரசு கோரியுள்ளது. தற்போதைய விதிப்படி 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மட்டுமே தடுப்பூசி மையத்தை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் 50 அல்லது 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் கூட தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசை கோரியுள்ளோம்.

அப்படி செய்தால் தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் அதிகப்படியான மக்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News