ஆன்மிகம்
நவராத்திரி கொலு

நவராத்திரி கொலுவின் தத்துவம்

Published On 2020-10-17 08:52 GMT   |   Update On 2020-10-17 08:52 GMT
நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அதன்படி செயல்பட்டு வெற்றிபெற்றவன், சுரதா என்ற மன்னன். அவன் ஒரு முறை தன்னுடைய எதிரிகளை அழிப்பதற்காக, தன் குருவிடம் ஆலோசனை கேட்டான்.

அதற்கு அவனது குரு, “தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தைச் செய்து, உண்ணாவிரதம் இருந்து வழிபாடு செய்தால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும்” என்று கூறியருளினார்.

அதன்படியே ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்தான். அதை பிரதிஷ்டை செய்து உண்ணாவிரதம் இருந்து காளி தேவியை வேண்டினான் சுரதா மன்னன். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புது யுகத்தையே உண்டு பண்ணினான்.

எனவே அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரி வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப் படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

முதலாம் படி

கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

இரண்டாம் படி

அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிரினங்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.

மூன்றாம் படி

மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

நாலாம் படி

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

ஐந்தாம் படி

ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

ஆறாம் படி

இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

ஏழாம் படி

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

எட்டாம் படி

தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

ஒன்பதாம் படி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.
Tags:    

Similar News