குழந்தை பராமரிப்பு
கங்காரு முறை குழந்தை பராமரிப்பு

கங்காரு முறை குழந்தை பராமரிப்பு ஏன் அவசியம்?

Published On 2022-03-04 07:18 GMT   |   Update On 2022-03-04 07:18 GMT
கங்காரு குட்டிகளை போல குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் அதிகம் வசிக்கும் பாலூட்டி இனமான கங்காரு, பிரசவ காலத்திற்கு முன்னதாகவே குட்டிகளை ஈன்றுவிடும். அவைகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கங்காருவின் வயிற்று பகுதியில் பை போன்ற அமைப்பு இயற்கையாகவே உருவாகி இருக்கும். அதில் தான் பிரசவித்த குட்டிகளை சுமந்து கொண்டே திரியும். தாயின் அரவணைப்பில் வளரும் அந்த குட்டிகள் ஆரோக்கியமான நிலையை முழுமையாக எட்டிய பிறகு பையை விட்டு வெளியேறும். அதுவரை தாயின் உடலுடன் ஒட்டியவாறே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். கங்காரு குட்டிகளை போலவே குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது. தாயின் உடலுடன் ஒட்டியவாறே குழந்தையை பராமரிக்கும் இந்த முறையை பின்பற்றுவதற்கான அவசியம் பற்றி அறிந்து கொள்வோம்.

கங்காரு முறையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த முறை தாய்க்கும், குழந்தைக்கும் இடையே ஐந்து புலன்களுடனும் தொடர்பை ஏற்படுத்துகிறது. குழந்தை தாயின் அரவணைப்பை தோலுக்கு இடையேயான தொடர்பு (தொடுதல்) மூலம் உணர்கிறது. தாய் தனது மார்பு பகுதியில் குழந்தையை நெருக்கமாக வைத்திருக்கும்போது, தாயின் குரல் மற்றும் இதய துடிப்பை காதுகள் மூலம் கேட்கிறது. அதன் மூலம் கேட்கும் திறனை பெறுகிறது.

தாய்ப்பாலை உறிஞ்சும்போது சுவையை அறிகிறது. தாயை பார்க்கும்போது பார்வைத்திறனை மெருகேற்றிக்கொள்கிறது. தாயின் வாசனையையும் உணர்ந்து கொள்கிறது. இந்த இயற்கை முறை குழந்தையின் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தாய்ப்பாலை ஊக்குவிப்பதன் மூலம் நோய்த்தொற்று உள்பட பிற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

கங்காரு முறையில் யாரெல்லாம் குழந்தையை கவனித்துக்கொள்ள முடியும்?

தாய் மட்டுமின்றி தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கங்காரு முறையில் குழந்தையை கவனித்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட நபர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடாது.

அடிக்கடி கை கழுவுதல், தினசரி குளித்தல், விரல் நகங்களை அடிக்கடி வெட்டுதல், அழுக்கில்லாத ஆடைகளை அணிதல் போன்ற சுகாதார விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். நகை, கைக்கடிகாரம் அணிவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை சுகாதாரத்தை பேணுவதற்கு இடையூறாக இருக்கலாம். குழந்தைகளுக்கு காயங்களையும் ஏற்படுத்தலாம்.

கங்காரு முறை பராமரிப்புக்கு பொருத்தமான ஆடை எது?

தாய்மார்கள் புடவை அணிவது பொருத்தமானதாக இருக்கும். பேபி பேக் பயன்படுத்தலாம். குழந்தைகளை நீண்ட நேரம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஆடைகளை உபயோகிப்பதும் சிறந்தது. கைக்குழந்தைகள் தொப்பி, சாக்ஸ், டயப்பர்கள் மற்றும் பருத்தி போன்ற மென்மையான இயற்கை துணியால் செய்யப்பட்ட சட்டை அணிந்திருப்பது சிறப்பானது.

குழந்தையை கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. பாட்டில் மூலம் உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட நபருடன் குழந்தையை தொடர்பு கொள்ள அனுமதிக்காதீர்கள்.

கங்காரு பராமரிப்பு முறை குழந்தைக்கு எப்போது தேவைப்படாது?

குழந்தையின் எடை 2,500 கிராமுக்கு மேல் அதிகரித்திருந்தால் அதற்கு கங்காரு பராமரிப்பு முறை தேவைப்படாது. மேலும் குழந்தை தாயின் அரவணைப்பை விரும்பாமல், அழுது அடம்பிடிக்கும் சமயத்தில் கங்காரு பராமரிப்பு முறையை கைவிட்டுவிடலாம்.

கங்காரு முறையை கையாண்டால், தினமும் குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது குழந்தையை அரவணைத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மணி முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.

எந்த குழந்தைக்கு காங்காரு முறை தேவை?

குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘காங்காரு மதர் கேர்’ முறை தேவைப்படும். குறிப்பாக 2,500 கிராமுக்கும் குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை அவசியமானது. பொதுவாக எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை ‘இன்குபேட்டர்’ உதவியுடன் பராமரிக்கும் வழக்கம் இருக்கிறது.

அதுபோலவே தாய் தன் உடலுடன் ஒட்டியவாறு குழந்தையை பராமரிக்கும்போது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியும். குறை பிரசவம் என்பது கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளை குறிக்கும். 2 ஆயிரம் கிராமுக்கும் குறைவாக பிறந்த குழந்தை களுக்கு கங்காரு முறை பராமரிப்பு அவசியமானது.
Tags:    

Similar News