ஆன்மிகம்
ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்

ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2021-03-30 03:03 GMT   |   Update On 2021-03-30 03:03 GMT
குஜிலியம்பாறை ராமகிரியில் உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து மண்டகப்படிதாரர்களின் வாகனப்புறப்பாடு, சாமி வீதி உலா, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி கோவில் சன்னிதானத்தில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமி சிலைகள் பூஜை செய்து கொண்டு வரப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் காலை 9.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 2 மணி நேரம் திருத்தேர் வீதி உலா வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) பல்லாக்கு அலங்கார நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News