உள்ளூர் செய்திகள்
கெங்கையம்மன் கோவில் தரைப் பாலம் சீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்ட காட்சி.

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தரைப்பாலம் சீரமைப்பு

Published On 2022-04-15 10:53 GMT   |   Update On 2022-04-15 10:53 GMT
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தரைப்பாலம் சீரமைப்பு தொடங்கியது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாகும். கொரோனாதொற்று காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் . முன்னேற்பாடுகள் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கவுண்டன்யமகாநதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்-பாலம் சீரமைக்கப்பட்டது. 

சுமார் மூன்றடி உயரத்திற்கு கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் தண்ணீர் செல்லாததாலும், தரைமட்டத்தை விட கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மூன்றடிக்கு மேல் உயரமாக, அகலம் குறைவாக இருப்பதாலும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

கெங்கையம்மன் சிரசு திருவிழாவின்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தின் உயரத்தை எந்திரங்கள் மூலம் 3 அடி அளவு குறைத்தும் தரைத்தளத்தை அகலப்படுத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. 

3 நாட்களில் இப்பணிகள் முடிவு பெறும் என கூறப்படுகிறது. அதன்பின் வாகனங்கள் தரைப் பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News