உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏக்கள் கலெக்டரிடம் மனு அளித்த காட்சி.

கோவையில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை-எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

Published On 2022-01-12 11:09 GMT   |   Update On 2022-01-12 11:09 GMT
கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
கோவை:

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 3-வது அலையாக ஒமைக்ரான் பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை பெருந்தொற்றின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டு உயிர் இழப்புகளையும், பரவலையும் தடுத்து மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். 

வீதி, வீதியாக கிருமிநாசினி தெளிக்கப்படுவதுடன் மருத்துவமனைகளில் கூடுதலாக கொரோனா வார்டுகள், கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். 

ஆக்சிஜன் பற்றாக் குறையால் உயிரிழப்புகள் ஏற்படாத வகையிலும், ஆம்புலன்ஸ் காத்திருப் பினால் உயிரிழப்புகள் ஏற்படாத வகையிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
 
பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோ தனைகள் செய்ய அரசும் மற்றும் தொழிற்சாலை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும்  பயணிகளை பரிசோதனை செய்து ஒரு வார காலம் தனிமைப் படுத்திக் கொள்ளும் வகையில் வழிவகை செய்யலாம். தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலங் களில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு 3 வேளை உணவு வழங்க வேண்டும். 


கோவை நகரில் பருவமழை காரணமாக சேதம் அடைந்த சாலைகள், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளால் சேதம் அடைந்த சாலைகள், மாநகராட்சி நிர்வாகத்தினால் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட ரூ.151 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மக்கள் நலன் கருதி நிறைவேற்ற வேண்டும். 

சுகுணாபுரம் பகுதியில் நடமாடும் சிறுத்தைப்புலி இதுவரை பிடிபடவில்லை. வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு சிறுத்தை புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறுப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், செ. தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், வி.பி. கந்தசாமி, அமுல்கந்தசாமி, கோவை தெற்கு தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News