செய்திகள்
பஸ்கள் இயக்கப்படுவதற்கு முன்பு வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

நாகர்கோவிலில் இருந்து வெளிமாவட்டத்துக்கு 16 ஆம்னி பஸ்கள் இயக்கம்

Published On 2020-10-17 08:33 GMT   |   Update On 2020-10-17 08:33 GMT
நாகர்கோவிலில் இருந்து வெளிமாவட்ட பகுதிகளுக்கு 16 ஆம்னி பஸ்கள் இயக்கபட்டன. பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரியில் தனியார் ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டன.

பின்னர் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால், தனியார் பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் ஓடவில்லை. மேலும் அரசுக்கு தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதாவது, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தனியார் பஸ்கள் ஓடவில்லை. எனவே 6 மாதங்களுக்கான சாலைவரியை ரத்து செய்ய வேண்டும், 100 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பஸ்களை அதன் உரிமையாளர்கள் இயக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்று ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊரடங்கால், கடந்த 6½ மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டன. நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்ட பகுதிகளுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து தனியார் ஆம்னி பஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, நாகர்கோவிலில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சுமார் 75 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை சென்னைக்கு 8 ஆம்னி பஸ்களும், கோவைக்கு 4 பஸ்களும், ஓசூருக்கு 3 பஸ்களும், வேளாங்கண்ணிக்கு ஒன்று என மொத்தம் 16 பஸ்கள் இயக்கபட்டன. முன்னதாக ஓரிரு நாட்களுக்கு முன்பே 2, 3 ஆம்னி பஸ்கள் சென்னைக்கும், கோவைக்கும் இயக்கப்பட்டன. தற்போது ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதை முன்னிட்டு நேற்று காலை மாநகராட்சி சார்பில் பஸ்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பஸ் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யபட்டன.
Tags:    

Similar News