செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை - 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

Published On 2020-11-24 19:32 GMT   |   Update On 2020-11-24 19:32 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் சுமார் 2 மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைக்கவில்லை. அங்கு தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியிலுள்ள பாக்லான் மாகாணத்தில் பாக்லான் இ மர்காசி என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் சோதனை சாவடியை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இந்த மோதலில் 12 பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
Tags:    

Similar News