செய்திகள்
தீபாவளி

சென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்கு சிகிச்சை

Published On 2020-11-16 02:14 GMT   |   Update On 2020-11-16 02:14 GMT
சென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
சென்னை:

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், உறவினர்களுக்கு பலகாரங்கள் கொடுத்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற தீ விபத்துகளில் தீக்காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 45 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் 38 பேர் தீபாவளி தினத்தன்று தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-

சென்னையில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக 38 பேர் சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 பேர் லேசான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் 10 பேர் படுகாயம் ஏற்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மற்ற முக்கிய மருத்துவமனைகளான ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 பேரும் லேசான தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் ஒருவர் தீ விபத்தில் படுகாயத்துடன் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பல்வேறு விழிப்புணர்வுகளால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீபாவளி தினத்தன்று சென்னையில் மட்டும் 40 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 106 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News