செய்திகள்
கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-09-11 15:12 GMT   |   Update On 2021-09-11 15:12 GMT
கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த குறைந்தது 75 சதவீதம் மக்கள் வைரசிற்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.

நாகர்கோவில்:

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8,00,692 முதல் டோஸ் தடுப்பூசியும், 1,85,957 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

தற்போது தடுப்பூசி மையங்களில் கூட்டம் குறைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை மெகா சிறப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. குமரி மாவட்டத்தில் 625 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் நவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பஸ் நிலையம், முக்கிய சந்திப்பு, மார்க்கெட் பகுதிகளில் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தடுப்பூசியின் அவசியம் மற்றும் பொதுமக்கள் எந்த ஒரு அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி மாவட்ட கலெக்டர் அரவிந்த் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி ஆகியோர் பேசி உள்ளனர்.

மெகா தடுப்பூசி முகாம் குறித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த குறைந்தது 75 சதவீதம் மக்கள் வைரசிற்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் நம் மக்கள் தொகையில் 75 சதவீதம் என்பதால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க உதவும். நாளை நடக்கும் சிறப்பு முகாமில், இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாவது தவணைக்கான கால இடை வெளி வரப்பெற்றவர்களும் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

“இனியொரு விதி செய்வோம், கொரோனா மரணம் இல்லை என்ற சரித்திரம் படைப்போம்” “இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்” இறைவன் அளித்த முழு ஆயுளையும் அனுபவிப்போம். இரண்டு கொரோனா தடுப்பூசிகள் விலை ரூ.1,800 ஆகும். மனித உயிர்களை நாம் விலையாக கருதாமல் அரசு தடுப்பூசிகளை விலையில்லாமல் தருகிறது. அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியினை பெற்று, விலை மதிப்பு மிக்க உயிரினைக் காக்க நாம் ஒவ்வொருவரும் உதவ முன் வர வேண்டும் என கூறி உள்ளார்.

Tags:    

Similar News