லைஃப்ஸ்டைல்
கடன் வாங்கும் அளவு

கடன் வாங்கும் அளவு எது தெரியுமா?

Published On 2021-02-01 03:28 GMT   |   Update On 2021-02-01 03:28 GMT
கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. கடன் வாங்குவதற்கான அடிப்படை தகுதி அதை எப்படி திருப்பி செலுத்துவோம் என்பதை பொறுத்து தான்.
கடன் அன்பை முறிக்கும் என்பது வெறும் பழமொழி அல்ல. அது முன்னோர்களின் அனுபவ பாடம். கடனும், நோயும் இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று முன்னோர்கள் கூறி உள்ளார்கள்.

இன்றைய காலத்தில் கடன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாது. எவற்றிற்கு கடன் வாங்கலாம் என்கிற எந்த வரம்புகளும் இல்லாமல் வாங்கிக் குவிக்கிறோம். கட்ட முடியாத அளவுக்கு வாங்கிக் குவித்து, வருமானத்தை கடனுக்கும், வட்டிக்கும் கட்டி வருகிறது பல குடும்பங்கள்.

தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவச் செலவு என அனைத்து வகைகளிலும் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு கடனும் சேர்ந்து கொள்கிறது. ஆக கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒரு சராசரி குடும்பம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும்.

மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் ஒருவருக்கு பைக் அவசியமானதாக இருக்கும். அப்போது தான் அவரது தொழிலில் நீடிக்க முடியும். வருமானம் அதிகரிக்க முடியும் என்கிற நிலையில் வாகனக் கடன் அவசியமாகிறது. அதே நேரத்தில் வருமானத்தில் பல கடன்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நடுத்தர குடும்பம் வாகன கடன் வாங்க ஆசைப்படுவது வருமானத்துக்கு மீறியது. சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனிநபர் கடன் வாங்கினால் அது சுமையாக மாறிவிடும். கடன் குறித்த பயம், பயன்பாட்டை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும், என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதாவது நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் வாங்குவதற்கான அடிப்படை தகுதி அதை எப்படி திருப்பி செலுத்துவோம் என்பதை பொறுத்து தான். மொத்தமாகவோ அல்லது தவணைமுறையிலோ திருப்பி செலுத்தும் அளவுக்கு வருமானம் இருந்தால் கடன் கிடைக்கும். வருமானத்தில் 60 சதவீதம் அல்லது மாத வருமானத்தில் செலவுகள் போக மிச்சமிருக்கும் உபரி தொகை இந்த இரண்டின் அடிப்படையில் கடன் வாங்கும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. கடன் வாங்குபவரின் வயது மற்றும் எத்தனை ஆண்டுகளில் அந்த கடனை கட்டி முடிப்பார் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதிகபட்ச வயது வரம்பு 60 என்று கணக்கிடப்படும். இளம் வயதிலேயே கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்த அதிக காலம் கிடைக்கும். 30 வயதில் கடன் வாங்கினால் அடுத்த 30 ஆண்டு காலம் வரை கடனை கட்ட முடியும். 50 வயதான நபர் வாங்குகிறபோது அவருக்கு 10 ஆண்டுகள் தான் கிடைக்கும்.
Tags:    

Similar News