செய்திகள்
நிலச்சரிவு

கொடைக்கானல், மேகமலையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

Published On 2019-12-03 12:26 GMT   |   Update On 2019-12-03 12:26 GMT
கொடைக்கானலில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் மேகமலையில் 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பயணிக்க அச்சம் அடைந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையினால் பல சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுக்கம் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.பேரிடர் மீட்பு குழு சார்பில் 15 பேர் மட்டுமே கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அவர்களால் அனைத்து பணிகளையும் செய்வது என்பது இயலாத காரியம். இதனால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், மலைச்சாலையில் உருண்டு விழும் பாறைகளை மட்டும் அகற்றி வருகின்றனர்.

இதேபோல் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடைகள் வைத்து அடுக்கி தற்காலிக பாதை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொடைக்கானல் நகரில் மலை கிராமங்களிலும் பெய்து வரும் தொடர் மழையினால் சாலைகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. எனவே இந்த சாலையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியாமல் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்-மேகலை சாலையில் நேற்று 2-வது முறையாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும் பாறைகள் உருண்டும் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. 18 கொண்டை ஊசி கொண்ட இந்த சாலையில் அரசு பஸ்கள் மற்றும் ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் செல்லும் மலைச்சாலையில் 1-வது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்ற மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News