செய்திகள்
விராட் கோலியுடன் சாருலதா படேல்

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் - பிசிசிஐ இரங்கல்

Published On 2020-01-16 08:17 GMT   |   Update On 2020-01-16 08:17 GMT
இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியை உற்சாகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 87 வயது கிரிக்கெட் ரசிகை மரணமடைந்தார்.
புதுடெல்லி:

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தன்வசமாக்கியது. 

அந்த தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதிய போட்டியின் போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.

அவர் வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.

மேலும் அவர் இந்தியாவின் தேசிய கொடியினை ஆடைக்கு மேலே அணிந்திருந்தார். சாருலதா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்திய வீரர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.



போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்து இந்திய வீரர்களான விராட் கோலி, டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சாருலதா படேல் (87) மரணம் அடைந்ததாக அவரது கிரிக்கெட்.டாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘13/01/2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்கள் பாட்டி இயற்கை எய்தினார். அவர் ஒரு இனிமையான, அசாதாரணமான பெண்மணி. கடந்த ஆண்டு அவரை சிறப்பு மிக்கவராக உணரவைத்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவிற்கும் மிக்க நன்றி. உங்களைச் சந்தித்தது அவரது வாழ்க்கையின் சிறந்த நாள் ஆகும். அவரது ஆன்மாவை சிவபெருமான் ஆசீர்வதிப்பாராக’ என கிரிக்கெட்.டாடி பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

‘இந்திய அணியின் மேன்மையான ரசிகை சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார், மேலும் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அவரது ஆன்மா அமைதியில் நிலைத்திருக்கட்டும்’ என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News