செய்திகள்
மதுரை ஐகோர்ட்

நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்- ஐகோர்ட் கண்டனம்

Published On 2019-08-02 07:17 GMT   |   Update On 2019-08-02 10:20 GMT
நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் கொலை போன்ற சம்பவங்கள் நடக்க காரணம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை:

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. இவரது மகன் நல்லதம்பி (42).

முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான 39 ஏக்கர் சுற்றளவில் உள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக வீரமலை, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர்கள் மீது சிலர் ஆத்திரமடைந்து அவர்களை பழிவாங்க திட்டம் தீட்டினர்.

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி காலையில் நல்லதம்பி தனது தோட்டத்தில் பறித்த பூக்களை திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். நச்சநல்லூர் அருகே வந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் அவர்களின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த வீரமலையையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற சவுந்தரராஜன் (36), சண்முகம் (34), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஆகிய 6 பேரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 31-ந்தேதி சரணடைந்தனர்.

அவர்களை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு முத்துராமன் உத்தரவிட்டார். அதன்படி அவர்களை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்தன. அதன் அடிப்படையில் தந்தை-மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், முதலைப்பட்டியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சரணடைந்துள்ளனர். ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேல்விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கிறது. ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால் பல்வேறு வழக்குகளில் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் அவற்றை அரசு நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தந்தை-மகன் கொலை தொடர்பாக இதுவரை போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News