செய்திகள்
சஸ்பெண்டு

கடையம் அருகே கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கில் மோசடி- செயலாளர், கணக்காளர் சஸ்பெண்டு

Published On 2020-10-14 08:04 GMT   |   Update On 2020-10-14 08:04 GMT
கடையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்த செயலாளர், கணக்காளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவண சமுத்திரத்தில் கோவிந்தபேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சிறுசேமிப்பு, வைப்பு நிதி, நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை எடுக்க சென்றபோது கணக்கில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வருவதாக உறுப்பினர்கள் புகார் கூறி வந்தனர்.

நேற்று கடையம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது கணக்கில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை எடுக்க சென்றுள்ளார். ஆனால் அவரது கணக்கில் ரூ.500 மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த மற்ற உறுப்பினர்களும் வங்கியில் வந்து பார்த்தபோது அவர்களது கணக்கிலும் பணம் இல்லாதது தெரியவந்தது.

இதனால் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி கடையம் போலீஸ், சேரன்மகாதேவியில் உள்ள சரக அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

சேரன்மகாதேவி சரக கூட்டுறவு துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதேபோல் சுமார் 500-க்கும் மேற்பட்டோரின் கணக்கில் பணம் வரவு வைக்காமல் சங்க செயலாளர் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து சங்கத்தின் செயலாளரிடம் நடத்திய விசாரணையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக சங்க செயலாளர் ஷாஜகான் (வயது 41), கணக்காளர் முத்து செல்வி(31) ஆகியோரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2 பேரும் சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News