செய்திகள்
எஸ்.பி.அம்ரித்

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்- அரசு உத்தரவு

Published On 2021-11-26 04:12 GMT   |   Update On 2021-11-26 04:12 GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித்தை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் அங்குள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வந்தார். அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனை எதிர்த்து அதன் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இன்னசென்ட் திவ்யாவை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித் நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.அம்ரித், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த அவர், 2013-ம் ஆண்டு தமிழக அரசு பணியில் சேர்ந்தார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருந்துள்ளார்.
Tags:    

Similar News