செய்திகள்
தொலைத்தொடர்பு கோபுரம்

தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2021-09-15 11:17 GMT   |   Update On 2021-09-15 11:17 GMT
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமைக் காலம் 20 வருடங்களுக்கு பதிலாக 30 வருடங்களாக உயர்த்தப்படும் என மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதாவது, தானியங்கி முறையிலான (இத்தகைய முதலீடுகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை) அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத தானியங்கி வழி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020ல், உள்நாட்டு வணிகங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்துவதைத் தடுக்க, இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு 
நேரடி முதலீடுகளுக்கு
 மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சீனாவுடனான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பதிலடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபற்றி மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தொலைத்தொடர்புத் துறையில் தானியங்கி முறை மூலம் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் இதற்கு பொருந்தும் என்றும் குறிப்பிட்டார். எதிர்கால ஏலங்களைப் பொருத்தவரை, அலைக்கற்றை உரிமைக் காலம் 20 வருடங்களுக்கு பதிலாக 30 வருடங்களாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News