செய்திகள்
சோனியா காந்தி.

மகாராஷ்டிரா ஆட்சியில் சேர்வதற்கு சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனை

Published On 2019-11-14 11:27 GMT   |   Update On 2019-11-14 11:27 GMT
மகாராஷ்டிரா ஆட்சியில் சேர்வதற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட வேண்டும் என சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி முக்கிய நிபந்தனை விதித்துள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாரதீய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன.

பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதால் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் பகத்சிங் கோசியாரி கேட்டுக் கொண்டார். ஆனால் தனக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா மறுத்து விட்டது. அதன் பிறகு 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை கவர்னர் அழைத்தார்.

சிவசேனா கட்சி தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனால் கவர்னர் வழங்கிய அவகாச நேரத்துக்குள் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடிய வில்லை.

அதுபோல சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கவர்னர் அவகாசம் அளித்தும் அந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க இயலவில்லை. இதனால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியுடன் கொள்கை கோட்பாடுகளில் ஒரே மாதிரி இருக்கும் சிவசேனா கட்சி கடந்த 30 ஆண்டுகளாக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து இருந்தது. முதல்-மந்திரி பதவிக்காக பாரதீய ஜனதாவுடன் உறவை முறித்த சிவசேனா பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும் வெளியேறி விட்டது.

அடுத்த கட்டமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் நட்பை உருவாக்கி ஆட்சியில் அமரும் முயற்சிகளில் சிவசேனா தலைவர்கள் மிக மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நம்புவதற்கு முதலில் சோனியாவும், சரத்பவாரும் மிக மிக தயங்கினார்கள்.

சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் அவர்களிடம் இருந்தது.

காங்கிரஸ் கட்சியில் மகாராஷ்டிரா மாநில மூத்த தலைவர்கள் மற்றும் 44 எம்.எல்.ஏ.க்களும் சிவ சேனாவை ஆதரிக்க வேண்டும் என்றனர். ஆனால் ஏ.கே.அந்தோணி, மல்லிகார் ஜுன கார்கே இருவர் மட்டும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர். என்றாலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டுக் கொண்டதால் சோனியா தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

சிவசேனாவை ஆதரிக்கும் வி‌ஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமரசமாகி முன் வந்தாலும் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு:-

1. முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மூன்று கட்சிகளும் பெற வேண்டும்.

2. ஆட்சி அதிகாரங்களில் மூன்று கட்சிகளுக்கும் சம அளவில் பங்கு வேண்டும்.

3. புதிய அரசு குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தின்படி நடைபெற வேண்டும்.

4. பொது செயல் திட்டத்தை மூன்று கட்சிகளின் குழுக்கள் முடிவு செய்ய வேண்டும்.

5. சிவசேனா கட்சி தனது இந்துத்துவா கொள்கையை கைவிட வேண்டும்.

6. ஆதித்யா தாக்கரேக்கு முதல்-மந்திரி பதவி அளிக்கக் கூடாது.

7. மகாராஷ்டிரா அமைச்சரவையில் காங்கிரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களை தர வேண்டும்.

8. உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரசுக்கு முக்கிய பங்கு தர வேண்டும்.

9. நீண்ட கால செயல்திட்டங்களை அமல்படுத்த ஆலோசனை பெற வேண்டும்.

10. அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைந்த நிலையில் எடுக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் இந்த நிபந்தனைகளை கண்டு சிவசேனா தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் அவர்கள் தங்களது முயற்சியை கை விடாமல் காங்கிரசை அரவணைத்து செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகிய இருவரிடமும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தொடர்ந்து திங்கட்கிழமை முழுவதும் பேசினார். இதையடுத்து மூன்று கட்சிகளும் பேச்சு வார்த்தை நடத்த ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் சோனியா தனது தூதுவராக அகமதுபடேலை மும்பைக்கு அனுப்பி இருந்தார். அவருடன் செவ்வாய்க்கிழமை இரவு நீண்ட நேரம் உத்தவ்தாக்கரே ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப், முன்னாள் முதல்-மந்திரி அசோக்சவான், காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கராவ் தாக்கரே ஆகிய மூவரும் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்கள்.

நேற்று மாலை மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது காங்கிரசின் நிபந்தனைகள் தொடர்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சமர சம் செய்யும் வகையில் புதிய திட்டம் ஒன்றை உத்தவ் தாக்கரே அப்போது தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

புதிய அரசில் முதல்- மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகளுக்கு சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் பிரித்துக் கொள்வது. காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆண்டுகளுக்கும் முழுமையாக துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது.

அமைச்சரவையில் சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு தலா 154பதவிகளை பிரித்துக் கொள்வது. காங்கிரஸ் கட்சிக்கு 11 மந்திரி பதவிகளை தருவது. சபாநாயகர் பதவியையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டு தருவது.

இவ்வாறு உத்தவ்தாக்கரே புதிய திட்டத்தை தெரிவித்தார்.

புதிய அரசை குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் கீழ் நடத்துவது பற்றியும் காங்கிரஸ் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேசினார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 10 பேர் குழுக்களுடன் இது தொடர்பாக பேச தயாராக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார்.

இவை தவிர காங்கிரஸ் தெரிவித்துள்ள மற்ற நிபந்தனைகளில் 90 சதவீதத்தை ஏற்றுக் கொள்வதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் முதல்-மந்திரி பதவியை ஆதித்ய தாக்கரே ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் வந்துள்ளனர்.


உத்தவ் தாக்கரே எதிர் பார்த்ததை விட அதிகமாக பணிந்து விட்டதால் காங் கிரஸ் கட்சியும், தேசிய வாத காங்கிரசும் குழுக்கள் அமைத்து பொது செயல் திட்டம் பற்றி பேசும் நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித்பவார், ஜெயந்த் பாட்டீல், சாஜன்புச்பல், நவாப் மாலிக், தனஞ்செய் முண்டே ஆகிய 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் 5 பேர் குழு அறிவிக்கப்பட உள்ளது. இந்த 10 பேர்களும் சேர்ந்து அடுத்த கட்டமாக டெல்லியில் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மா னித்துள்ளனர். அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் வடிவமைக்கப்படும்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தொடங்கி உள்ள பேச்சுவார்த்தைகள் நல்ல திருப்தியான நிலையில் முன்னேற்றம் பெற்று இருப்பதாக சரத்பவாரும், உத்தவ் தாக்கரேவும் அறிவித்து உள்ளனர். விரைவில் இழுபறி நீங்கி ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடும் என்று மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

முதல்-மந்திரி பதவி தவிர அனைத்து முக்கிய இலாகாக்களையும் உத்தவ் தாக்கரே விட்டு கொடுக்க முன் வந்திருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் சிவசேனாவிடம் எழுத்துப்பூர்வமாக உடன்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசில் வலுத்துள்ளது.

முதலில் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனாவை வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என்று மட்டுமே நினைத்து இருந்தனர். ஆனால் துணை முதல்வர் பதவி, சபாநாயகர் பதவி, 11 மந்திரி பதவிகளை தருவதாக உத்தவ் தாக்கரே கூறி இருப்பதால் ஆட்சியில் பங்கேற்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சரத்பவாருடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், சிவசேனா கட்சிக்கும் நேரடி தொடர்பு ஏற்பட்டு இருப்பதால் பேச்சுவார்த்தைகள் சுமூக முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச செயல் திட்டத்தை வடிவமைக்கவே சற்று அவகாசம் தேவைப்படும் என்று தெரிகிறது. அது முடிவுக்கு வந்து விட்டதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சென்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

எனவே விரைவில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு தோன்றலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டால் மீண்டும் சர்ச்சை ஏற்படலாம்.

Tags:    

Similar News